எம்ஜிஆரின் ‘இரட்டை’ வியூகம்! – தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 3

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

1952ல் அண்ணாவின் தலைமையை ஏற்று திமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த எம்ஜிஆர், கட்சியின் பிரச்சார பிரபலமாகிறார். கட்சி போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை செல்கிறார். அடுத்த சில வருடங்களில் திமுகவின் மேலவை உறுப்பினர், சிறுசேமிப்புத்தலைவர் என முன்னேறி திமுகவின் பொருளாளர் ஆகிறார்.

 அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அடுத்த தலைவருக்கான போட்டியில் “எம்ஜிஆர் யார் பக்கம் ?”  என கேட்கப்படும் அளவுக்குக் கழகத்தின் முக்கிய பொறுப்பிலிருந்த,  “எம்ஜிஆர் கட்சி திமுக” எனப் பாமர மக்கள் அடையாளப்படுத்தும் அளவுக்குப் பிரபலமான, கருணாநிதி ஆட்சியில் மருத்துவத்துறை மந்திரி பதவியைக் கேட்கும் அளவுக்குச் செல்வாக்கான அரசியல்வாதி  எம்ஜிஆர் !

 திமுகவிலும் திரைத்துறையிலும் எம்ஜிஆர் உச்ச புகழுடன் திகழ்ந்த அந்த காலகட்டத்தில் அவருக்குப் பத்தாயிரம் ரசிகர் மன்றங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது !

கருணாநிதி – அண்ணா

பார்த்துப் பார்த்து கட்டமைக்கப்பட்ட எம்ஜிஆர் பொதுவெளி பிம்பத்தினால் ஈர்க்கப்பட்ட,  படிப்படியாக  வளர்த்தெடுக்கப்பட்ட இந்த மன்றங்களின் உறுப்பினர்களை வெறும் திரைத்துறை ரசிகர்களாக மட்டுமே அடையாளப்படுத்த முடியாது.

1952லிருந்து திமுகவின் தேர்தல்களில் களப்பணி ஆற்றிய இந்த ரசிகர்கள் திமுகவின் சித்தாந்தத்தினால் அரசியல்படுத்தப்பட்ட தொண்டர்கள். எம்ஜிஆருக்கு மட்டுமல்லாமல், திமுகவின் ஒட்டுமொத்த வெற்றிக்காகவும் உழைத்தவர்கள் !

ஆனாலும்,

திமுக தலைவர்களின் சொத்து விபரங்களையும், கட்சியின் வரவு செலவு கணக்குகளையும் சமர்ப்பிக்குமாறு பொது மேடைகளில் விமர்சித்ததால், கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நடிகர் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். அவரது ஒட்டுமொத்த ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவினால் முதல்வரானார் என்பதே பொதுக் கருத்தாக உள்ளது.

அண்ணா, கருணாநிதி

ஊடகங்களும் எம்ஜிஆரின் அரசியல் வெற்றியின்  முழுமுதல் காரணமாக அவரது நட்சத்திர பொதுவெளி பிம்பத்தைத்தான் முன்னிறுத்துகின்றன.

அரசியல் விமர்சகர்கள் எம்ஜிஆரின் “அரசியல் கணக்கை” அதிமுகவிலிருந்தே தொடங்குகின்றனர் !

அரசியல் சாணக்யத்தனத்தால் தான் சார்ந்த கட்சியை உடைத்த அரசியல்வாதி என்பதைவிடக் கருணாநிதி வஞ்சித்ததால் வீறுகொண்டு எழுந்த நடிகர் என்பதே அவரது பொதுவெளி பிம்பத்தின் அரசியல் வெற்றிக்கான மூலகாரணம் எனக்கொண்டால்,  தான் கட்டமைத்த பொதுவெளி பிம்பத்துக்கு பின்னாலிருந்த “திமுக அரசியல்வாதி” எம்ஜிஆரும் மேற்சொன்ன பொதுக்கருத்தையே விரும்பியிருக்கக்கூடும் !

காரணம்,

திரைத்துறையிலும் சரி, அரசியல் வெளியிலும் சரி, எம்ஜிஆரின் கதாநாயக பொதுவெளி பிம்பம் வீறுகொண்டு எழுந்து வெற்றிபெற ஒரு வில்லன் தேவை…

திரைத்துறையில் நம்பியார் ! அரசியல் வெளியில் கருணாநிதி !

ம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய காலத்தில் திமுக கட்சி தன் உச்சத்தைத் தொட்டு, பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. அதே கட்சியைச் சேர்ந்த பிரபல நடிகரின் ரசிகர்களும் அந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தது இயல்பான ஒன்று.

எம்ஜிஆர் – அண்ணா

தனிக்கட்சியைத் தொடங்கியபோது திமுகவிலிருந்து தன் கட்சிக்கு எம்ஜிஆர் மடைமாற்றிக்கொண்டது வெறும் திரைத்துறை ரசிகர்களை அல்ல, எம்ஜிஆரை நேசித்த திமுக தொண்டர்களை !  எம்ஜிஆர் என்னும் நடிகரின் ரசிகர்கள் அவர் தனிக் கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே,  திமுக என்னும் அரசியல் பேரியக்கத்தின் தொண்டர்களும் கூட என்பதை மீண்டும் ஒரு முறை மறவாமல் கருத்தில் கொள்ள வேண்டும் !

இத்துடன் வாதத்தை நிறுத்திக்கொண்டு, திரைத்துறை கவர்ச்சியின் மூலம் அடைந்த பலனுக்குச் சரிபாதியான பலனை திமுக எனும் கட்சியிலிருந்தும் எம்ஜிஆர் பெற்றார். அதுவே அவரது அரசியல் வெற்றிக்கு காரணம் என முடித்துக்கொண்டாலும் அரசியல் வெற்றிக்கணக்கு இடிக்கும் !…

திமுகவின் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை எம்ஜிஆர் அன்று கவர்ந்திருந்தால் கருணாநிதியால் நீண்ட அரசியல் வனவாசத்துக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது. முன்னால் திமுக தொண்டர்களின் ஆதரவினால் மட்டுமே எம்ஜிஆரால் தொடர்ந்து அட்சி கட்டிலை தக்கவைத்துக்கொண்டிருந்திருக்கவும் முடியாது. இங்குதான் அவர் பார்த்துப் பார்த்து கட்டமைத்துக்கொண்ட பொதுவெளி பிம்பம் அதன் பலனைக் கொடுத்தது ! …

பார்ப்பன எதிர்ப்பு ஜாதி ஒழிப்பு போன்ற, சமூகத்தின் ஒரு சாராரை ஈர்த்தால் மற்றொரு சாராரை இழக்க நேரிடும் திமுகவின் கொள்கைகளுக்குள் அடங்காத எம்ஜிஆரின் பொதுவெளி பிம்பம் திமுகவின் கொள்கைகளை ஏற்காத மக்கள் வாக்குகளையும் கூடுதலாகப் பெற்றுத்தந்தது. எம்ஜிஆர் தான் நடித்த படங்களில் தன் திராவிட நிலைப்பாட்டைக் கழக கொடியின் வர்ணம்,  உதய சூரியன் போன்ற வார்த்தைகள் மூலமாக மேலோட்டமாக மட்டுமே எம்ஜிஆர் காட்டினாரே ஒழிய, கடவுள் மறுப்பு , ஜாதி ஒழிப்பு போன்ற வாதங்களை அனுமதித்ததில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று !

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

அதிமுக தொடங்கப்படுவதற்கு முன்னர் வரை பெரும்பாலும் காங்கிரசுக்குக் கிடைத்த ஆதரவு அது ! காமராஜரை தன் தலைவராகவும் அண்ணாவை அரசியல் வழிகாட்டியாகவும் தான் ஏற்றுக்கொண்டதாக என்றோ பேசியதை, 1972-ம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் முதன்முறையாகக் கருணாநிதிக்கு எதிராகத் தான் ஆற்றிய பொதுவெளி உரையில் எம்ஜிஆர்  நினைவு கூர்ந்ததைக் குறிப்பிட வேண்டும் !

ஆக, தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளைப் பரப்பும் சாதனமாக திரைத்துறையைப் பயன்படுத்தி கருணாநிதி அரசியலில் வென்ற அதே உத்தியை மாற்றிப் பயன்படுத்தி வெற்றிகண்டவர் எம்ஜிஆர்.

எம்.ஜி.ஆர்

திமுக மேடைகளில் தனக்குக் கிடைத்த ஆதரவை மேன்மேலும் மெருகூட்டி அரசியல் வெற்றியாக மாற்ற தன் திரைத்துறை கவர்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டார்  எம்ஜிஆர் .

அண்ணா தன் “வேலைக்காரி” படத்தின் மூலம் தொடங்கிய திராவிட திரைப்பட பிரச்சார பாதையை அகலப்படுத்தி முன்னும் பின்னுமாகப் பயன்படுத்திக்கொண்டனர் இந்த “இருவர்” !

னிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணமும் திட்டமும் எம்ஜிஆருக்கு முன்னரே இருந்தது என உறுதிப்படுத்தும், அவருக்கு நெருக்கமானவர்களின் வரலாற்று வாக்குமூலம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்திருக்குமானால் கருணாநிதியையும் மிஞ்சிய அரசியல் சாணக்கியர் எம்ஜிஆர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்திருக்கக்கூடும் !

ஒருவேளைத் தன்னை எதிர்ப்பவர்களை முளையிலே கிள்ளிவிடும் கருணாநிதியின் அரசியல் குணம் அறிந்த, அவரது “நண்பர்” எம்ஜிஆர் தன் திட்டத்தை யாரிடமும் பகிராமல் தனிமனிதனாகவே அரங்கேற்றியிருக்கலாம். அந்த கண்ணோட்டத்திலும் எம்ஜிஆர் வியக்கப்பட வேண்டியவரே ! ஏனென்றால் கருணாநிதியை வென்றவர் என்பதால் அல்லாமல் அவரால் வஞ்சிக்கப்பட்டவர் என முன்னிறுத்தப்பட்ட எம்ஜிஆரின் பொதுவெளி பிம்பம் தான் காலத்தைக் கடந்தும் மின்னிக்கொண்டிருக்கிறது !

தொடரும்…

காரை அக்பர்

தேர்தல்

மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Vikatan Signature Campaign: IAS Machendranathan, release the report on the Parandur airport project!

Congress plays a game of hide and seek in the DMK alliance – what is the reason it hasn’t been resolved yet?!