தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக, சிட்டிங் மேயர் சண்.இராமநாதன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இராமநாதன் தன்னுடைய மேயர் பதவியைக் கடந்த ஏப்ரல் 6-ம் தேதியே ராஜினாமா செய்திருக்கிறார். ஏற்கெனவே பஞ்சாயத்துக்குப் பஞ்சமில்லாத தஞ்சையில் இப்போது யார் புதிய மேயர் என்ற ரேஸ் சூடு பிடித்திருக்கிறது. சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி எல்லா தரப்பிலும் கடுமையாக முட்டி மோதுகிறார்.

இன்னொரு பக்கம், சண்.இராமநாதன் தி.மு.க கவுன்சிலர்கள் பலரையும் தனித் தனியாக அழைத்து, ‘யார் வார்டுகளில் அதிக வாக்குகளை வாங்கி தருகிறீர்களோ… அவர்களுக்கு மேயர் பதவியை தலைமையில் பேசி வாங்கி தருவேன்’ என்று கிளப்பிவிட்டிருக்கிறார். இதை நம்பி மேயர் ஆகும் ஆசையில் கவுன்சிலர்கள் வாக்குகளை பெற்றுக் குவிக்க சுழன்று வருகிறார்கள்.
திருநெல்வேலியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், ‘சில பல கோடிகளைக் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை தி.மு.க பையில் போட்டுக்கொண்டது. உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது’ என்று பேசியது கதர்களை உஷ்ணமாகியிருக்கிறது.

கடைசி வரை கூட்டணிக்கு வருவதாகப் போக்கு காட்டி ஏமாற்றிய காங்கிரஸைப் போட்டுப் பார்க்க முடிவு செய்திருக்கிறதாம் த.வெ.க. அதிலும், காங்கிரஸுக்குக் கணிசமான வாக்குகள் இருக்கும் கடைக்கோடி மாவட்டங்களில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார் விஜய். தி.மு.க கூட்டணி மீதான வெறுப்பில் இருக்கும் காங்கிரஸ் வாக்குகளை தங்களுக்கு மடைமாற்றவே இப்படி ஒரு உத்தியைக் கையாள தொடங்கியிருக்கிறது விசில் கட்சி.
ஒவ்வொரு தொகுதியிலும் பிரதானக் கட்சி வேட்பாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயர் கொண்ட நபர்களைத் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறக்குவது வழக்கமான ஒன்று. இம்முறை, சீட் கிடைக்காத விரக்தியில் தனி செல்வாக்கு கொண்ட பலரும் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சையாக தேர்தலில் இறங்கியிருப்பது பிரதான வேட்பாளர்களைக் கலக்கமடையச் செய்திருக்கிறது.
களத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், ‘யார் எங்கே எப்படி வாக்குகளைப் பிரிப்பார்கள், ஒட்டுகள் எப்படி சிதறும்…’ என்றே தெரியாத நிலை நீடிக்கிறது. இந்தச் சூழலில், சுயேச்சை வேட்பாளர்களும் வாக்குகளைப் பிரிப்பதால் இரு கழகங்களையும் சேர்ந்த வேட்பாளர்கள் அரண்டு போயிருக்கிறார்களாம். பல தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்களை அமைதி ஆக்குவதற்கு டீல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தென்மாவட்டம் ஒன்றில், மலர்க் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ‘புல்லாங்குழல்’ பிரமுகர், சீட் பெறுவதற்காக இரண்டு ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்திருப்பது தற்போது வெளிச்சமாகியிருக்கிறது.
மலர்க்கட்சியின் மேலிடப் பார்வையாளர் ஒருவருக்கு ஸ்வீட் பாக்ஸ்களை படியளந்திருக்கும் அந்த ‘புல்லாங்குழல்’ பிரமுகர், தொகுதிக்குள் ஓட்டுக்கு பசையை வாரி இறைக்கவும் தயாராகிறாராம். கட்சி சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் நிதி பிரித்து தரப்படவுள்ள சூழலில், அந்த ‘புல்லாங்குழல்’ பிரமுகரின் பயோடேட்டாவை எடுத்திருக்கிறது மத்திய உளவுத்துறை.
அதில், அந்த பிரமுகர் மீதிருக்கும் பழைய வழக்கு விவரங்களும் தெரியவரவே, ‘இப்படிப்பட்டவருக்கு ஏன் சீட் அளித்தார்கள்… ஓட்டுக்குப் பசை கொடுத்தாலும் ஜெயிக்க வாய்ப்பில்லை’ என்று ரிப்போர்ட் அளித்துவிட்டார்களாம். அதுதொடர்பான விசாரணையில்தான், மேலிட பார்வையாளரிடம் ஸ்வீட் பாக்ஸ்கள் அளிக்கப்பட்டதெல்லாம் தெரியவந்திருக்கிறது. அவர்மீது டெல்லி மேலிடம் கடும் கோபத்தில் இருக்கிறதாம்.
தலைநகரில், ரயில்கள் வந்து நிற்கும் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவருக்கு, மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை சூரியக்கட்சி. ஏரியா மாண்புமிகுவின் ஆதரவாளருக்கு சீட் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த கடுகடுப்பில் இருக்கும் அந்த எம்.எல்.ஏ., வேட்பாளருக்கு எதிரான உள்ளடி வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம்.
அவருக்கென தொகுதிக்குள் பெரிய செல்வாக்கு இல்லை என்றாலும், ஒரு சில வட்டச் செயலாளர்களைப் பிடித்து, ஓட்டுக்குப் பசை செல்வதில் குழப்பம் விளைவிக்க திட்டம் தீட்டுகிறாராம். ‘எனக்கு சீட் இல்லைனு சொல்லிட்டாங்கல்ல, எப்படி ஜெயிக்குறாங்கனு பார்க்குறேன்…’ என்று கருவிக்கொண்டு திரிகிறாராம் அந்த எம்.எல்.ஏ. ‘அமைதியாக இருந்தால் ஆட்சி அமைந்தவுடன் வாரியமாவது தருவார்கள். இப்படி உள்ளடி வேலை செய்தால், கிடைப்பதும் பறிபோய்விடும். புரிந்துகொள்ளாமல் அரசியல் செய்கிறாரே…’ என்று நொந்து கொள்கிறார்கள் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.