கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. இன்று இவர் காந்திபுரம் பகுதியில் தேர்தல் பணி குழு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நான், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளேன். இந்தத் தேர்தலில் கோவையில் உள்ள பத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும்.

ஓரணியில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை சிறப்பாக திமுக-வினர் செய்துள்ளோம்.
இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் இன்று மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் தமிழக மக்கள் திமுக-வுக்கு பிரமாண்டமான வெற்றியை தரத் தயாராக இருக்கிறார்கள்.
கடந்த முறை பத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை திமுக கூட்டணி இழந்திருந்தது. இதனால் கரூரில் போட்டியிட்ட என்னை கோவையில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கியுள்ளார். அவரது ஆணைக்கிணங்க கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் உறுதியாக வெல்ல உழைக்க இருக்கிறோம்” என்று பேசினார்.
’50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’ என அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறியது குறித்த கேள்விக்கு, “அவர்கள் தோற்று விடுவோம் என்றா சொல்லப் போகிறார்கள்? கடந்த முறை முதலமைச்சர் கோவை வந்தபோது பம்ப்செட் உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலுக்கு பல்வேறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் விவசாயிகளுக்கு பம்ப்செட்டுகள் புதிதாக மாற்றி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை பம்ப் செட் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இது போன்ற சாதனைகள் காரணமாக கோவை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். கோவை தெற்கு தொகுதியை விட்டுவிட்டு ஏன் வடக்கு தொகுதிக்கு சென்றார்கள் என அவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
எனக்கு கோவை வேறு கரூர் வேறு அல்ல. கரூர் அரவக்குறிச்சி தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். இப்போது கோவை தொகுதியை எனக்கு வழங்கி இருக்கிறார்கள். அதிலும் கட்டாயம் வெற்றி பெறுவேன்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சில தொகுதிகளை கோவையில் திமுக இழந்தது. அதன் பின்பு அதிமுக எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும்.
பொதுமக்கள் அவர்களை நம்பி கட்சியில் இணைந்து இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்புங்கள். கோவை தெற்கு தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்துச் செயல்படுத்துவோம்.
கோவையில் ஜிடி நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா திட்டம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நான் எந்த வேட்பாளரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. நாங்கள் திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சாதனைகளை கூறி, அதனால் பலனடைந்த மற்றும் பலனடையப் போகும் பயனாளிகளை எங்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றுவோம்” என்று பதிலளித்தார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.