விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி மதிமுக தலைவர் வைகோ தொடர்ந்த வழக்கு விசாரணை, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “கடந்த 2013-ல் தொடர்ந்த ரிட் மனு, இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று, வரும் 26-ஆம் தேதி பிற்பகல் 2:15 மணிக்கு எனது வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டாண்டுகளாக இருந்த இந்தத் தடை தற்போது ஐந்தாண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த எனது சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகிறேன்.
இதற்கிடையில் இந்துத்துவ சக்திகளும், சனாதன கூட்டமும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கூட்டமும் எப்படி சிந்தனையாளர்களை கர்நாடகத்திலும், மராட்டியத்திலும் படுகொலை செய்தார்களோ, அதேபோல இப்ரான் ஹபீப் என்கின்ற 93 வயது நிரம்பிய ஆய்வாளர், சிந்தனையாளர், அறிஞர் உரையாற்றிக் கொண்டிருந்த மண்டபத்துக்குள்ளேயே நுழைந்து அவரை கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். இதற்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காது. ஏனெனில், அவர்கள் எல்லையைத் தாண்டி, கற்பனை செய்ய முடியாத அக்கிரமங்களை செய்ய துணிந்து விட்டார்கள்.
இந்திய அரசியல் நிர்ணய சபையில், அம்பேத்கர் தலைமையில் வந்தே மாதரம் என்ற பாடலை, தேசிய கீதமாக ஏற்று கொள்வதா வேண்டாமா என வாதம் நடந்தது. பெரும்பான்மையான உறுப்பினர்களும், அண்ணல் அம்பேத்கரும் `அந்தப் பாடலில் இந்து மத கடவுள்களை வணங்குவதாக வரிகள் இருக்கிறது. இதை கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட பிற மதத்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அந்த வரிகளை நீக்குவது மட்டுமல்ல, மற்ற வரிகளையும் கூட நாட்டினுடைய தேசிய கீதக்கோடு சேர்த்து பாடுவதற்கு வழிவகை செய்யக் கூடாது’ என்று முடிவெடுத்து நிராகரிக்கப்பட்டது.

அந்தப் பாடலை தற்போது நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள மிருகத்தனமான பெரும்பான்மையைப் பயன்படுத்தி பா.ஜ.க கட்டாயமாக்கியுள்ளது. இது சிறுபான்மையினரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் செயல். ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை நீக்குவது, டெல்லி தலைநகரத்தை மாற்றி வாரணாசியை தலைநகராக மாற்றுவது உள்ளிட்ட அஜெண்டா வைத்திருப்பதாக தகவல்கள் இருக்கின்றன. பெரும் விபரீதத்துக்குள்ளே இந்த நாடு பிரவேசிக்கப் போகிறது.
நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும். குரூரமாக சனாதன கோட்பாட்டை நிலைநாட்ட முயற்சிப்பதால், எதிர் விளைவுகள் கண்டிப்பாக ஏற்படும். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை கண்டிப்பாக இருக்கும். காந்தி பெயரை வேலை திட்டத்தில இருந்து நீக்கினார்கள். பிரிட்டிஷ் சர்க்காரிடம் இரண்டு முறை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, மாத உபகார சம்பளம் வாங்கிய துரோகி சாவர்கர் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்தார்கள்.

சாவர்கர் படத்துக்கு பிரதமர் பூக்களை தூவுகிற அந்த கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. திராவிட இயக்க பூமியில் திராவிட இயக்கத்தையே நாங்கள் தகர்ப்போம் என்று நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கே வந்து மமதையோடு பேசினார். தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று கருதித்தான் மோடி, பாரதியார் பாடல்களை, திருக்குறளில் ஒன்று என இந்தியில் எழுதி தமிழ்நாட்டை மதிப்பதாக வேடம் போடுகிறார்கள்.
தி.மு.க-வுடன் எங்களின் இந்த தோழமை, எல்லா சூழ்நிலையிலும் தொடரும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்.
நடிகை தொடர்பாக நயினார் பேசியது விவாதமாகியிருக்கிறது. நயினார் நாகேந்திரன் பண்புள்ள, அமைதியானவர். அவர் ஏன் இப்படி பேசினார் என்பது தெரியாது. பொதுவாக தனிநபர் விமர்சனத்தை நான் தவிர்த்துக் கொள்கிறவன். அப்படி தனிநபர் விமர்சனம் செய்வதை தவிர்த்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க பா.ஜ.க-வுக்கு அடிமை என்ற முதல்வரின் விமர்சனம் உண்மை. அதுதான் அவர்களுக்கு சுடுகிறது. காங்கிரஸ் கேட்கும் கூட்டணி ஆட்சி ‘இல்லாத ஊருக்கு போகாத வழி’. என்னை பொறுத்தவரை அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டினுடைய கோடிக்கணக்கான தாய்மார்கள் மகளிர் வாக்குச்சாவடிக்கு போனால் தி.மு.க-வுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்பதிலேயே தீர்மானமாக இருக்கிறார்கள்.” எனக் குறிப்பிட்டார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.